கவச் பயன்பாடு

NIC/GOV மின்னஞ்சலுக்கான கவச் பயன்பாடு (Kavach Application)

முக்கிய அறிவிப்பு:
இந்த இணையப் பக்கமானது NIC/GOV மின்னஞ்சல்களை(@nic.in மற்றும் @gov.in) கையாளும் அரசு அலுவலர்களுக்கு உண்டான பிரத்தியேகமான வழிகாட்டியாகும். நீங்கள் அரசு அலுவலர் அல்லாது பொதுமக்களில் ஒருவராக இருப்பின் தயவுசெய்து இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறி விடவும். நன்றி.

கவச் பயன்பாடு (Kavach Application) - ஒரு அறிமுகம்:

சாதாரணமாக உங்களின் NIC/GOV மின்னஞ்சலை அணுக பயனர் பெயர் / கடவுச்சொல் போதுமானது. இந்த நடைமுறையில் சிறிது மாற்றம் செய்து மற்றுமொரு பாதுகாப்பு அளிக்க(2FA-Two Factor Authentication - இரண்டு அடுக்கு பாதுகாப்பு) இந்த கவச் பயன்பாடு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது கடவுச்சொல் அளிப்பதுடன், கவச் பயன்பாடு வாயிலாக மேலும் ஒரு அங்கீகாரத்தை அளித்து உங்களின் மின்னஞ்சலை அணுக வேண்டியிருக்கும். இதன் மூலம் உங்களின் மின்னஞ்சலை அனுமதி இல்லாத எந்த ஒரு நபரும் அணுக இயலாது. உங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டை பாதுகாப்பதுடன், அதன் அணுகுதல்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

இந்த கவச் பயன்பாட்டை உங்களின் கணினி, அலைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற சாதனங்களில் நிறுவி, உங்களின் மின்னஞ்சலையும் இணைத்த பிறகு, ஒவ்வொரு முறையும் உங்களின் மின்னஞ்சலை அணுகும்போதும், இந்த கவச் பயன்பாட்டிற்கு வரும் அறிவிப்பை “Accept” செய்து உள்நுழைய வேண்டும். இந்த கவச் பயன்பாடானது மிகவும் எளிமையானது.

கவச் பயன்பாட்டிற்கு செல்லும் முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்க:

 • உங்களின் மின்னஞ்சலோடு அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையெனில் தேசிய தகவலியல் மையத்தை (National Informatics Centre) தொடர்பு கொள்ளுங்கள்.
 • உங்களின் மின்னஞ்சல் இயக்கமில்லா நிலையில் (Inactive) இருந்தால், அதை இயக்க நிலைக்கு (Active) மாற்ற தேசிய தகவலியல் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
 • கவச் பயன்பாட்டை ஒரு மின்னஞ்சலுக்கு அதிகபட்சம் மூன்று சாதனங்களில்(கணினி, அலைபேசி) மட்டுமே அங்கீகரிக்க இயலும். நீங்கள் எந்த ஒரு கணினியிலிருந்தும் உங்களின் மின்னஞ்சலை அணுக இயலும், ஆனால் அவ்வாறு அணுகும்போது கவச் பயன்பாடு நிறுவியுள்ள சாதனங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.
 • உங்கள் அலைபேசியில் இந்த கவச் பயன்பாட்டை நிறுவி இருந்தால் நீங்கள் எங்கிருந்தும் உங்களின் மின்னஞ்சலை அணுக இயலும் என்பதை அறியவும்.
 • உங்களின் மின்னஞ்சல் கணக்கை கவச் பயன்பாட்டில் நிறுவிய பிறகு, உங்களின் மின்னஞ்சலை அணுகும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கவச் பயன்பாட்டின் வழியாக அனுமதி பெற்றே உள்நுழைய முடியும் என்பதை நினைவில் கொள்க.
 • உங்களின் மின்னஞ்சலை அணுகும் ஒவ்வொரு முறையும், நீங்கள் உங்களின் மின்னஞ்சல் கணக்கை கவச் பயன்பாட்டிற்காக அங்கீகரித்துள்ள அனைத்து சாதனங்களுக்கும் (அலைபேசி, கணினி) அறிவிப்பு செல்லும். ஏதேனும் ஒரு சாதனத்தின் வழியே அனுமதி அளித்து உங்களின் மின்னஞ்சல் கணக்கில் உள்நுழையலாம்.
 • உங்களின் மின்னஞ்சலை அணுகும்போது எந்தவித அறிவிப்பினையும்(Notification) கவச்-ல் நீங்கள் பெறாவிட்டால், கவச் பயன்பாட்டில் உள்ள PULL என்பதை க்ளிக் செய்து பெறமுடியும். அப்போதும் நீங்கள் எந்த ஒரு அறிவிப்பினையும் பெறாவிட்டால், கவச் பயன்பாட்டில் 30 வினாடிகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருக்கும் 6 இலக்க எண்களை (OTP) உங்களின் கடவுச்சொல்லின் இறுதியில் எந்தவித இடைவெளியும் இல்லாமல் சேர்த்துக்கொடுத்து உள்நுழைய இயலும் என்பதை அறியவும்.
 • இந்த ஈரடுக்கு அங்கீகாரம் (Two Factor Authentication) என்பது உங்களின் மின்னஞ்சலை வேறு எந்த நபரும் தவறாக பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்கவே கவச் பயன்பாடானது அவசியமாக்கப்பட்டுள்ளது. எனவே எந்தவித தயக்கமும் இன்றி இந்த கவச் பயன்பாட்டினை நிறுவி உங்களின் மின்னஞ்சல் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இங்கு கீழ்காணும் வழிகாட்டிகளில் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே நீங்கள் கவச் பயன்பாடு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இயலும். மேலும் நீங்கள் உங்களின் மின்னஞ்சலில் உள்நுழைந்து Video Tutorials என்ற பகுதியிலும் அறிந்துகொள்ள இயலும்.

 1. கவச் பயன்பாட்டை கணினியில் நிறுவுவது எப்படி?
 2. கவச்(KAVACH) பயன்பாட்டினை நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல்
 3. கவச் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய
 4. கவச் பயன்பாட்டை அலைபேசியில் நிறுவுதலுக்கான காணொளி
 5. மின்னஞ்சல் தகவல்களை புதுப்பிதற்கான ஆவணம் (இயக்க நிலைக்கு மாற்ற, அலைபேசி எண் மாற்ற)

இந்த கவச் பயன்பாடு அல்லாமல் உங்களின் மின்னஞ்சலை நீங்கள் அணுக விரும்பினால் Mozilla Thunderbird போன்ற ஏதாவது ஒரு mail client வாயிலாகவும் அணுக இயலும். அதற்குரிய வழிகாட்டி கீழே வழங்கப்பட்டுள்ளது.

 1. NIC/GOV மின்னஞ்சல்களை Mozilla Thunderbird mail client-ல் இணைப்பது எப்படி?

கவச் பயன்பாடு பற்றிய விவரங்கள், கவச் பயன்பாட்டில் எழும் சந்தேகம் மற்றும் சிக்கல்களுக்கு தயவுசெய்து உங்களின் துறை சார்ந்த தேசிய தகவலியல் மைய அதிகாரிகள் / மாவட்ட தேசிய தகவலியல் மையத்தை (National Informatics Centre) தொடர்பு கொள்ளுங்கள்.